வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுமாறு தமிழக பொது சுகாதாரம் அறிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் புதியதாக ஒரு வைரஸ் பிரிட்டனில் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வீரியம் அதிகமாக இருப்பதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதனால் மக்கள் தங்களுடைய நிம்மதி இழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸுக்கான அறிகுறிகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் பிரிட்டனை தொடர்ந்து நைஜீரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முதன்முதலாக பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிரிட்டனில் இருந்து நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை தமிழகம் வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது குறித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள 104 என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.