பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெயர் இடம் பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் ஏழாம் தேதி வரை 3 கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி போட்டியிடுகிறது. இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 30 பேர் அடங்கிய பட்டியலில் இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் திரு சச்சின் பைலட், பஞ்சாப் முதலமைச்சர் திரு அம்ரிந்தர்சிங், சட்டீஸ்கர் முதலமைச்சர் திரு பூபேஷ் பாகில், திரு குலாம்நபி ஆசாத் திரு தாரிக் அன்வர் உள்ளிட்டோர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள வாக்குப் பதிவில் தலா 2 பொது கூட்டங்கள் என மொத்தம் ஆறு பொதுக்கூட்டங்களில் திரு ராகுல் காந்தி பங்கேற்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.