Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்…!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் எதிரொலியாக தேர்தல் பணியாளர்களுக்கு முகக்கவசம் கையுறை சனிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

வாக்குச் சாவடிகள் அனைத்திலும் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே அவுரங்காபாத்தில் திப்ரா என்ற இடத்தில் சாலை ஒன்றில் வெடிகுண்டு கிடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற துணை இராணுவப் படையினர் அதை செயலிழக்க செய்தனர். பீகாரில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

3 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பிஹாரில் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய சிராக் பாஸ்வான் இன்  லோக் ஜனசக்தி முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |