ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து ஸ்கூட்டரில் டிவிஎஸ் டோல்கேடிலிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவரது பின்னால் திருப்பத்தூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ஞான ஜோதி என்ற உதவியாளர் அமர்ந்திருந்தார். அப்போது அவர்கள் ஸ்கூட்டரில் தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது பச்சை சிக்னல் விழுவதற்கு முன்பாக மத்திய பஸ் நிலையத்திலிருந்து வேகமாக வந்த அரசு பஸ் ஒன்று கணபதி ஓட்டி வந்த ஸ்கூட்டரின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் பலத்த காயமடைந்த கணபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஞானஜோதியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின் உயிரிழந்த கணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஞான ஜோதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்திற்கு காரணமான பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.