மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி கிருபா மற்றும் கிருபாவின் தங்கை பிரியா ஆகியோர் உடன் திருப்பூரில் தங்கி இருந்து பனியன்களை ஆர்டர் எடுத்து பட்டன் வைத்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உறவினரை பார்ப்பதற்காக முத்துராஜ் தனது மனைவி மற்றும் அவரது தங்கையுடன் தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பூர்-கரூர் ரோட்டில் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அரியலூரில் இருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இந்த விபத்தில் முத்துராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரியாவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காங்கேயம் டி.எஸ்.பி தனராசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.