மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரியபாக்கம் காலனியில் ரவி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இவர் பெரியபாளையம் பகுதியில் பக்தர்களுக்கான வேப்பஞ்சேலை கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகலா தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பெரிய பாளையத்தில் இருந்து அரிய பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது இவர்கள் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது, இவர்களது பின்னால் வந்த டிப்பர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சசிகலா பின்னால் வந்து கொண்டிருந்த லாரி சக்கரத்தில் சிக்கி தன் மகனின் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சசிகலாவின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பதிவு செய்த போலீசார் சசிகலாவின் இறப்பிற்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.