விபத்தின்போது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பெண்ணாத்தூர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வி என்ற சகோதரி உள்ளார். இவர் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரியகோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் செல்வி தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் தலை சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த இளங்கோவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் உயிரிழந்த செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.