இருசக்கர வாகன விபத்தில் மாமியாரும் மருமகளும் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் இருக்கும் சாத்தனுரைச் சார்ந்தவர் முத்து-சின்ன குழந்தை தம்பதியினர். முத்துவின் தம்பி மகன் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி பச்சையம்மாள். சின்ன குழந்தைக்கும், பச்சையம்மாளுக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்றுமுன்தினம் இரவு சின்ன குழந்தையின் மகன் சங்கர் இருவரையும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிகிச்சை முடிந்த பின்னர் இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் விழுங்காடு சாலை அருகே இருசக்கரவாகனம் வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த விறகு வெட்டும் தொழிலாளியான பாக்யராஜ் என்பவருடைய இருசக்கரவாகனம் சங்கரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன குழந்தையும், பச்சையம்மாள் உயிரிழந்தனர். சங்கரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளனர். இந்த விபத்து குறித்து வந்தவாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.