கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாம்பலம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் உதவி மேலாளராக அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் நிவேதா தனது நண்பரான ஜேக்கப் தாமஸ் என்பவருடன் இணைந்து மாமல்லபுரம் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து இவர்கள் கானத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது பலமாக மோதி கவிழ்ந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நிவேதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் மருத்துவமனையில் ஜேக்கப் தாமஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.