லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெயிண்ட் கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் அப்பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் முக்கூடல் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். இதனை அடுத்து இவரது மோட்டார் சைக்கிள் அத்தியூத்து பகுதியில் சென்று கொண்டிருந்த போது தூத்துக்குடியில் இருந்து புண்ணாக்கு ஏற்றி வந்த லாரி அத்தியூத்து பேருந்து நிறுத்தம் அருகே நின்றுள்ளது.
அப்போது லாரி திடீரென நின்றதை எதிர்பார்க்காத மீனாட்சிசுந்தரம் லாரியின் பின் பக்கத்தில் மோதி விட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.