அமெரிக்காவில் பைக் சாகச வீரர் தீவிர பயிற்சி மேற்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் 28 வயது இளைஞர் அலெக்ஸ் ஹார்வில். பைக் சாகசங்களின் மீது உயிராக இருக்கும் இவர் பல சாதனைகள் படைத்திருக்கிறார். கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துவிட்டார். இந்நிலையில் தனது சாதனையை தானே முறியடிக்க நினைத்த இவர் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
அப்போது வாஷிங்டன் நகரத்தில் இருக்கும் மோசஸ் என்ற ஏரியின் அருகில் பயிற்சிக்காக அமைக்கப்பட்ட ஓடுதளத்திலிருந்து தன் மோட்டார் சைக்கிளில் வந்து வேகமாக பாய்ந்துள்ளார். அப்போது மணல் குன்றின் மேல் பைக் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் அவரது தலைக்கவசம் தனியாக விழுந்துவிட்டது.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அலெக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியாகியுள்ளார்.