பைக்கில் சென்று கொண்டிருந்தவர்களிடம் மர்ம நபர்கள் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அரூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பரந்தாமன்- சோனியா. தம்பதியினர் இருவரும் நேற்று முன்தினம் காலை இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணி அளவில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வாணியம்பாடி நியூ டவுன் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது தம்பதியினரை 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் திடீரென சோனியா காதில் அணிந்திருந்த முக்கால் பவுன் ஜிமிக்கியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி சுதாரித்துக்கொண்டு மர்ம நபர்களை நீண்ட தூரம் விரட்டி சென்றுள்ளனர். செட்டியப்பனுர் என்ற பகுதிக்கு அருகே மர்ம நபர்களை அவர்கள் மடக்கியுள்ளனர். உடனே மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர் . இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கிடந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.