டயர் வெடித்து இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியை சேர்ந்தவர் வீரணன். இவருடைய மகன் செல்வம். செல்வம் கூலி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கோடாங்கிபட்டி அருகே உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவில் செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போடி- தேவாரம் சாலையில் நாகலாபுரம் விலக்கு அருகில் வந்தபோது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்துள்ளது.
இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் செல்போன் மூலம் தனது பெற்றோருக்கு தொடர்பு கொண்டு விபத்து குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செல்வத்தின் குடும்பத்தினர் சாலையோரத்தில் படுகாயத்துடன் மயக்க நிலையில் இருந்த செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.