கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தவணையாக செலுத்த அனுமதி வழங்க கோரிக்கை வைத்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை எதிர்த்து பூஸ்டர் தவணை தடுப்பூசி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒன்பது மாதங்கள் கழித்து தனியார் நிலையங்களில் பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.
முதல் இரண்டு தவணைகள் எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களோ அதே தடுப்பூசியை தான் பூஸ்டர் தவணையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டு தவணைகள் எந்தத் தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும் பூஸ்டர் தவணையாக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அவசர பயன்பாட்டிற்கு அனுமதி கோரி தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.
கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை ஐதராபாத்தில் இருக்கும் பயாலஜிக்கல்-இ என்ற நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பயாலஜிக்கல்-இ என்ற இந்த தடுப்பூசியே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி. புரத தடுப்பூசி. 5 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு இந்த தடுப்பூசியை அளிக்க அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு, ஏற்கனவே 12 லிருந்து 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.