ரேஷன் கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தின் முன்பு நேற்று பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஸ்கேனிங் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் தற்போது கைரேகை பதிவு மூலம் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டது.
பயோமெட்ரிக் இயந்திரம் 2ஜி கார்டு என்பதால் இணையதள வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்வதற்கு வெகு நேரம் ஆகின்றது. ரேஷன் கடைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படுகின்றது. இதனால் சிலர் ரேஷன் கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆகவே பயோமெட்ரிக் எந்திர சேவையைக் 4ஜி ஆக மாற்ற வேண்டும். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கைவிரல் ரேகை பதிவின் மூலம் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே கண்விளிதிரை மூலம் ஸ்கேன் செய்து விற்பனை செய்ய அரசு ஆவணம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்து கோஷங்களை எழுப்பி பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.