கடந்த வருடம் பல நாடுகளில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல தொழில்கள் முடங்கியதோடு பொருளாதார தேக்கம், வருவாய் இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டிருந்தது. அதேசமயம் கொரோனாவால் ஒரு பக்கம் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டில் ஜப்பானில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்ததோடு, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பலரது திருமணங்களும் தடைபட்டது.
மேலும் கடந்த வருடம் 8 லட்சத்து 40 ஆயிரத்து 832 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த பிறப்பு விகிதமானது அதற்கு முந்தைய வருடத்தை விட 2.8 சதவீதம் குறைவாகும். அதோடு மட்டுமல்லாமல் இந்த பிறப்பு விகிதமானது கடந்த 1899-ம் ஆண்டில் இருந்து மிக குறைவாகவே உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சீனாவில் புதிதாக பிறந்துள்ள குழந்தைகளுடைய விகிதம் 15 சதவீதம் குறைந்துள்ளதால் 3 குழந்தைகள் வரை தம்பதிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தென் கொரியாவிலும் பல வருடங்களாக பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. அதில் முதல் முறையாக கடந்த 2020-இல் பிறப்பு எண்ணிக்கையை விட இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.