அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது
திருப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு திருநாளன்று 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதனைப் பற்றி மருத்துவர்கள் கூறும் பொழுது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளைக்கு 1௦-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது வழக்கம். மேலும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது திருப்பூரில் குழந்தை பிறப்பு என்பது அதிகமாகவே காணப்படும். இதற்கு காரணம் திருப்பூர் தொழில் நகரமாக விளங்குவதும், அங்குள்ள அதிகளவு மக்கள் தொகையுமே ஆகும்.
அதுமட்டுமில்லாமல் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் தங்கள் கர்ப்பிணி மனைவியை சேர்த்து சிகிச்சையளிக்கும் அளவிற்கு போதிய பணம் வைத்திருப்பதில்லை. எனவே, அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறார்கள். இந்நிலையில் புத்தாண்டு நாளில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 8 பெண் குழந்தைகள் மற்றும் 7 ஆண் குழந்தைகள் அடங்குவர். இந்நிலையில் பிற நாட்களைவிட விசேஷ நாளான புத்தாண்டன்று 15 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.