இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் விரும்பும் உணவாக பிரியாணி உள்ளது. கொல்கத்தா, ஹைதராபாத், ஆற்காடு என பிரியாணிக்கு பெயர் போன ஊர்களின் பட்டியல்களில் திண்டுக்கலும் ஒன்று. திண்டுக்கல், பிரியாணி இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது. இரட்டைக்கிழவி என்கிறார்கள் திண்டுக்கல் மக்கள். முகலாய உணவு கலாசாரத்தின் அடையாளமாக பார்க்கப்படும் பிரியாணி, அவர்களின் இல்ல விழாக்களிலும் பண்டிகைகளிலும் முக்கிய இடம்வகிக்கிறது.
அசைவ பிரியர்கள் வெளுத்து கட்டிய இந்த உணவு நாளடைவில் காளாண் பிரியாணி, காய்கறி பிரியாணி என்று சைவத்திலும் இடம்பெற்றிருப்பதே பிரியாணி சுவையின் தரத்திற்கு சான்று. நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது பலர் பிரியாணி சுவையை மிஸ் செய்கின்றனர். பிரியாணியின் பண்டிகை என கூறப்படும் ரம்ஜான், கரோனா தாக்கத்தால் களையிழந்து காணப்படுகிறது.
திண்டுக்கல் பிரியாணி ஏன் இவ்வளவு பிரசித்தம் என்று முஜிப் பிரியாணி கடை உரிமையாளரிடம் கேட்ட போது, சீரக சம்பா அரிசியில் செம்மறி ஆட்டு இறைச்சியுடன் தயாரிக்கப்படுகிறது திண்டுக்கல் பிரியாணி. பொதுவாக தென் தமிழ்நாட்டில் வெள்ளாட்டு இறைச்சிதான் பிரியாணிக்கு பயன்படுத்துவர்கள். ஆனால் திண்டுக்கல் பகுதியில் செம்மறி ஆட்டு இறைச்சி தான் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அதீத கொழுப்பு தன்மை உடையதால் செம்மறி ஆட்டு இறைச்சி பிரியாணிக்கு நல்ல ருசி அளித்திடும். பாசுமதி அரிசியைவிட சீரக சம்பா பக்குவம் நாவோடு கரைந்திடும். இந்த மண்ணின் தண்ணீர், பாரம்பரிய சமையல் முறைகளினால் திண்டுக்கல் பிரியாணி தனித்து நிற்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன் காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக பிரியாணி கடைகள் செயல்படவில்லை. தற்போது இயங்க தொடங்கி இருந்தாலும் முன்பிருந்த விற்பனையில் பாதி கூட தற்போது கிடையாது. பொதுவாக ஒரு நாளுக்கு 20 முதல் 25 கிலோ பிரியாணி விற்பனை நடைபெறும். தற்போது 10 முதல் 15 கிலோ தான் விற்பனை செய்ய முடிகிறது. விடுமுறை நாட்களில் மதுரை, தேனி, திருச்சி என பக்கத்து மாவட்ட வாடிக்கையாளர்கள் அதிகம் வந்து சாப்பிடுவார்கள். இப்போது அவர்கள் வர இயலாத சூழலில் பிரியாணி விற்பனை மந்தமாகதான் இருக்கிறது” என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ரம்ஜான் பண்டிகைக்கு கல்யாண(நிக்காஹ்) பிரியாணி அதிக அளவில் ஆர்டர் செய்யப்படும். பெரும்பாலும் தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு பிரியாணி வழங்கிட விரும்வோர் பிரியாணி ஆர்டர் செய்வர்கள். கடந்த ரம்ஜானுக்கு 100 கிலோ வரை பிரியாணி ஆர்டர் இருந்தது. ஆனால் இந்த முறை 30 கிலோ ஆர்டர் தான் வந்துள்ளது. எளிய மக்களுக்கு உதவும்வகையில் ஒரு படி பிரியாணி வாங்கினால் 3 ஏழைகளுக்கு இலவசமாக பிரியாணி வழங்க திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் கரோனா தாக்கத்தால் ஆட்டு இறைச்சி விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இப்படியான சூழலில் ஆட்டு இறைச்சி வாங்க பலராலும் முடியாது. அவர்களும் பசியின்றி ஈகை பெருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம்” என்று பெருமிதம் கொண்டார்.
பிரியாணியை பிரிந்துள்ள தருணம் குறித்து பேசிய ஆர்த்தி, “எத்தனை வகை உணவு இருந்தாலும் எனக்கு பிடித்தது பிரியாணி. ஹைதராபாத், ஆம்பூர் என பல வகை பிரியாணி இருந்தாலும் திண்டுக்கல் பிரியாணியை அடிச்சுக்க முடியாது. ஒரு வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிடுவேன். ஆனால் இப்போ பிரியாணி கிடைக்காமல் தவிக்க வேண்டியிருக்கு. இந்த இரண்டு மாசமா பிரியாணிய கண்ணுல கூட பாக்க முடியல. இதனால யூடியூப் பார்த்து டிரை பண்ணி பார்த்தோம். ஆனா எவ்வளவு பக்குவமா பார்த்து பண்ணிணாலும் அந்த ருசி வரல. தக்காளி சாதம் போல இருந்தாலும் வேற வழியில்லாம பிரியாணின்னு நினைச்சி சாப்பிட்டேன். தொடர்ந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தாலும் கிடைக்கிறது சிரமமா இருக்கு” என்று வருந்தினார்.