சேலத்தில் ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினி விளக்கமளித்தார் .அதில் தாம் ஊடகங்களில் வந்ததையே கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இல்லாத விஷயம் ஒன்றும் நான் சொல்லல, கற்பனையாக ஒன்னும் சொல்லல, மத்தவங்க சொன்னதுதான் நான் சொல்லி இருக்கேன். இதுக்கு நான் மன்னிப்பு கேட்கணும், வருத்தம் தெரிவிக்கனும் என்று சொல்றாங்க. சாரி நான் மன்னிப்பு கேட்க முடியாது , வருத்தம் தெரிவிக்க முடியாது என்று ரஜினி ஆதாரத்துடன் திட்டவட்டமாக தெரிவித்தார் அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ரஜினிகாந்த் பேசியதற்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் செவ்வாய்பேட்டையில் 1971 ஆம் ஆண்டு பேரணி நடந்த இடத்தில் ராமர் சீதை படங்களுடன் அனுமதியின்றி பாஜகவினர் ஆன்மீக பேரணி செல்ல முயன்றனர். இதனை தடுத்து நிறுத்திய காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனுமதியின்றி பேரணி நடத்திய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.