திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் இன்று அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார்.
இதனிடையே முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக காந்தி சந்தை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரின்படி வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜயரகுவை கொலைசெய்ய 2 முறை முயற்சி நடைபெற்றுள்ளது. காந்தி சந்தை காவல் நிலையத்திலும் முகமது பாபு மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பாபு சிறையிலிருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், விஜயரகுவின் சடலம் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் பா.ஜகவினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்படுவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.