திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அண்மையில் திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி, பாஜக தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுக கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் பாஜகவில் இணைவார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த வி.பி துரைசாமி முருகனை சந்தித்து வாழ்த்து சொன்னதில் தவறு ஏதும் இல்லை என திமுக தலைவர் உணர்ந்ததால் பிரச்சனை இல்லை. அருகில் இருப்பவர்களின் சொல்லை கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து கொண்டிருக்கிறார். என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிப்பேன்.
மிகப் பெரிய கட்சியான பாஜக மாநிலத் தலைவராக ஒரு அருந்ததியர் நியமித்திருக்கிறது. ஜாதி எங்கே என கேட்கும் மற்ற கட்சிகளை பதவிகளை தருமா ? என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் துரை சாமி கேள்வி எழுப்பி இருந்தார். இது திமுகவின் தலைமையை நோக்கி கேட்கும் கேள்வியாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
வி.பி துரைசாமி வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அண்மையில் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்ட அந்தியூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.