சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த நிசார் அன்ன லட்சுமியையும் அவரது உறவினரான பாஜகவைச் சேர்ந்த ஒருவரையும் தகாத முறையில் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக்கோரி மீண்டும் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பெரவள்ளூர் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் உடனடியாக அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசினர். சமாதான பேச்சு வார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.