சிவசேனா பாரதிய ஜனதா இடையே சமரசம் ஏற்படாமல் போனதால் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் பதவி விலகியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தல் முடிவுகள் வந்த போது ஆட்சி அமைக்க அனைத்து வழிகளையும் தேர்வு செய்வோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசியது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். மெகா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்ததாக பட்னவிஸ் கூறியுள்ளார்.உத்தவ் தாக்கரே குறித்து பாரதீய ஜனதா கட்சி ஏதும் புகார் கூறாத நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சிவசேனா தலைவர்கள் விமர்சனம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகால உறவில் இருந்த கட்சி இப்படி நடப்பது சரியா என்று பட்னாவிஸ் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே பட்னவிஸ் குற்றச்சாட்டை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மறுத்துள்ளார். முதல்வர் பதவியில் பகிர்ந்து கொள்வது பற்றி பேசியது உண்மை என்றும் , சிவசேனாவுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சஞ்சய் ராவத் திடீரென சந்தித்துப் பேசியதால் பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே இனியும் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர். எனவே மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்த ஆளுநர் பரிந்துரை செய்வார் என்பதை அரசியல் நோக்கர்கள் கருத்தாகும்.