புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க பாஜக முயல்வதாக குற்றம் சாட்டிய முதல்வர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜகவினர் மனு தந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசும்போது, “புதுவையைத் தமிழகத்தோடு இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினார். இதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி (அக்.8) ஆளுநர் மாளிகை நோக்கி பாஜகவினர் ஊர்வலம் நடத்தினர். காமராஜர் சாலை – நேரு வீதி சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை தலைமைத் தபால் நிலையம் முன்பு காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், சாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை சென்று மனு அளித்தனர்.பின்னர் பேசிய பாஜக தலைவர் சாமிநாதன்,” முதல் அமைச்சர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு மனு தந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.