உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கின்றது.
2022ஆண்டின் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் ? என சி-வோட்டர் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது. சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது.
403 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 250 இடங்கள் வரை பெற்று 41.3 சதவீத வாக்குகளுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ள கருத்து கணிப்பு முடிவுகள், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு 130 முதல் 138 இடங்கள் கிடைக்கும் என்றும், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்கு 15 சட்டப்பேரவை தொகுதி முதல் 19 சட்டப்பேரவைத் தொகுதிகள் வரை வெற்றிபெறும் எனவும் காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
117 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 49 முதல் 57 இடங்களில் வெல்லும் எனவும், காங்கிரஸ் கட்சி 30 முதல் 47 இடங்களில் வெற்றிபெறும் எனவும், அகாலி தளம் கட்சிக்கு 17 முதல் 27 இடங்களை கிடைக்கவும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 45 சதவீத வாக்குகளுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ள கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு 34 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 15 % வாக்குகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
40 சட்டமன்ற இடங்கள் உள்ள கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு 24 முதல் 28 இடங்கள் வரை இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 5 இடங்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு 3 முதல் 7 இடங்களும் சுயேச்சை 8 இடங்களில் வெல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
31 இடங்களை பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்று உள்ள மணிப்பூர் மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 21 முதல் 25 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 15 முதல் 22 இடங்களையும் பெரும் எனவும், ஆட்சி அமைக்க சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு செல்வாக்கு உயர்ந்து உள்ளது.