பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது சீனாவின் சதியாக இருக்கலாம் என்ற பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டிருந்தார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்டு வந்த பிபின் ராவித் தன்னுடைய குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் பயங்கர தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிபின் ராவத் இறப்பு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியதாக கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகள் சிலர் மட்டுமே சீனாவை பற்றி வெளிப்படையாக பேசினார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் சீனா அரசுக்கு பயப்படாமல் தொடர்ந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுத்து வருகிறது.
மேலும் சீனாவால் நமக்கு எப்போதும் ஆபத்து தான், இந்திய எல்லைக்குள் சீனா நுழைந்து விட்டது என்று கூறியுள்ளார். இந்த ஹெலிகாப்டர் விபத்து சீனாவால் முன்னெடுக்கப்பட்ட Cyber warfare தாக்குதலாக இருக்கலாம் என்ற பரபரப்பு தகவலையும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் தொழில்நுட்ப மாறுபாடுகளை லேசர் மூலமாக ஏற்படுத்த முடியும். எனவே இந்த ஹெலிகாப்டர் விபத்து அது போன்ற ஒரு நிகழ்வாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் நாம் சீனாவை சாதாரணமாக எடை போட்டு விடக்கூடாது. இந்த சம்பவம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அதோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் மறு ஆய்வு செய்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் இதே போன்று தைவான் நாட்டின் முக்கிய ராணுவத் தலைவராக இருந்த ஜெனரல் ஷென் யி-மிங் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எனவே சீனா தான் இந்த விபத்துக்கு காரணம் என்று அப்போது பரவலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.