மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் பாஜக வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, 56 இடங்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டுத்தர பாஜகவிடம் கோரிக்கை விடுத்தது.
ஆனால், முதலமைச்சர் பதவியை விட்டுத்தர பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கு முன்னரே இதற்கான ஃபார்முலா வகுக்கப்பட்டுவிட்டதாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், முதலமைச்சர் பதவி குறித்து சிவசேனா எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்றார்.இரு கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து மாற்றுக் கருத்து நிலவி வந்தது. பின்னர், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுக்கு இடையே ஆட்சி அமைப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், நவம்பர் 7ஆம் தேதிக்கு முன்பு ஆட்சி அமைக்காவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்படும் என பாஜக மூத்தத் தலைவர் சுதிர் முங்கதிவார் எச்சரிக்கை விடுத்தார். இது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கும் எதிரானது என சிவசேனா சார்பில் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பல நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நாளை டெல்லி செல்லவுள்ளார். சிவசேனா ஆட்சி அமைக்க இந்த இரு கட்சிகள் உதவும் எனவும் கூறப்படுகிறது. இதனால் இரு தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பு முக்கியத்தும் பெறுகிறது.இது குறித்து சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத், “170 எம்.எல்.ஏ. க்களின் ஆதரவு எங்கள் கட்சிக்கு உள்ளது” என தெரிவித்தார்.