மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பக்ஷிஷ் சிங் விர்க். அண்மையில் இவர் பேசிய காணொலி ஒன்று வைரலானது.தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பக்ஷிஷ் சிங் விர்க், நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாரதிய ஜனதாவுக்குத்தான் விழும் என்ற பொருள்பட பேசினார். அவ்வளவுதான் கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா பிரமுகர்களுக்கே இது தூக்கிவாரிப்போட்டது.
இந்தக் காணொலி காட்டுத் தீ போன்று பரவத் தொடங்கியது. இதையடுத்து காங்கிரசின் மூத்தத் தலைவர்கள் இந்தக் காணொலியை தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர்.தொடர்ந்து தேர்தல் ஆணையமும் விளக்கம் கேட்டு பக்ஷிஷ் சிங் விர்குக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ”பாஜகவில் அதீத நேர்மை கொண்ட ஒரே நபர்” என அவரை மனமாரப் பாராட்டியுள்ளார்.சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், விர்க் தற்போது தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் உள்ள நபராக உருவெடுத்துள்ளார் என்பது கொசுறுத் தகவல்.