பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக ”வேல் யாத்திரை” நடத்த போவதாக அறிவித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி மற்றும் தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
கொரோனா தொற்றின் 2ஆவது மற்றும் 3ஆவது அலைக்கன அச்சுறுத்தல் உள்ளதால் பாஜக சார்பில் நாளை தொடங்கவுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேல் யாத்திரையால் தமிழகத்தில் மத கலவரங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில் தமிழக அரசின் முடிவு பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.