டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்கிழமை (ஜனவரி 21), புது டெல்லி தொகுதியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், இன்று மட்டும் இரண்டு பிரமாண்ட பேரணிகளில் பங்கேற்றார். முதல் பேரணி புராரி சட்டப்பேரவை பகுதியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மாலையில் கிருஷ்ணா நகர் பகுதியிலிருந்து ஷாஹ்தாரா பகுதிக்கு பேரணி நடைபெற்றது.
சுமார் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். அப்போது கிருஷ்ணா நகர் பகுதியில் இருந்த சிலர் திடீரென்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினர்.
அப்போது பேரணியில் தொண்டர்களிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் தடைபடக்கூடாது என்றால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள்.
கல்வி மற்றும் சுகாரத்துறையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்களை ஆராய்ந்து ஒட்டுமொத்த டெல்லியும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்