கருஞ்சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நாயை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள எமக்குண்டு குடியிருப்பில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கட்டப்பெட்டு வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு நாய் திடீரென மாயமானதால் அந்த நாயின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.
அதில் குடியிருப்புக்குள் நுழைந்த கருஞ்சிறுத்தை ஓன்று நாயை கவ்வி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பின் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கருஞ்சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மனித-வன விலங்குகள் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வன பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.