வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மற்றும் கோவை மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடுவதாக உதயம் பேரூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கோயம்புத்தூர் வந்த கேரள மாநில தனிப்படை காவல்துறையினர் கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சுல்தான் என்பவரது வீட்டில் கேரளா மற்றும் கோவை காவல் துறையினர் இணைந்து நடத்திய சோதனையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் சுல்தானுக்கு உதவியாக அஸ்ரப் என்பவரும் இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அந்த கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.