தானத்தில் சிறந்தது என்று அழைக்கப்படும் அன்னதானத்தால் வயிற்றுப்பசியை மட்டுமே தீர்க்க முடியும். ஆனால் ரத்ததானம் மூலம் உயிர் மட்டுமின்றி அதன் மூலம் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற முடியும். இந்தியாவில் உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் அல்லது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு 40 சதவிகித நோயாளிகள் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்கள் மட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போதும் அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. இரத்த தான விழிப்புணர்வு இருந்தால் இந்த 40 சதவிகிதம் பேரையும் காப்பாற்ற முடியும்.ரத்ததானம் செய்வதால் உடலில் வலு குறைந்து விடும் என்பது மூட நம்பிக்கையே.
யார் ரத்தம் கொடுக்கலாம் அல்லது கொடுக்க கூடாது
45 கிலோவுக்கு மேல் எடை கொண்ட 18 முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் தாராளமாக இரத்த தானம் செய்யலாம். ஆனால் மாதவிடாய் காலங்களில், கர்ப்ப காலங்களில் உள்ள பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ரத்ததானம் செய்யக்கூடாது.
18 வயதுக்கு கீழ் அல்லது 45 கிலோவுக்கு மேல் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள், ஏதேனும் தொற்று நோய் உள்ளவர்கள், காய்ச்சல் இருப்பவர்கள் ரத்ததானம் செய்யக்கூடாது. இதேபோல் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவரும் ரத்த தானம் செய்யக்கூடாது.
ரத்த தானத்தால் ஏற்படும் நன்மைகள்
ரத்ததானம் செய்வதால் பலன் பெறுவது நமது இரத்தத்தை பெறுபவர் மட்டுமல்ல நாமும் தான். நமது உடலில் 48 மணி நேரத்தில் இயற்கையாக புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிக்கடி ரத்ததானம் செய்வதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும். உதிரம் கொடுப்போம், உயிரைக் காப்போம்.