பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கும் பார்வையற்ற ஜூடோ வீரர் குறித்து விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு.
திருவள்ளூர் மாவட்டம் சோலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் 85% பார்வை குறைபாட்டுடன் பிறந்துள்ளார். முழுமையான கண்பார்வை இல்லாவிட்டாலும் எதிர்நீச்சல் போட்டு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தனக்கென்று ஒரு அடையாளத்தை தேட முயற்சித்த மனோகரன் பாரா ஜூடோவை தேர்வு செய்து பயிற்சி பெற்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படாத நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அளிக்கப்பட்டு வந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று மனோகரன் கலையை கற்றுக் கொண்டார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி இந்த பயிற்சியை அளித்து வருகிறார் மனோகரன். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெள்ளி வெண்கலம் போன்ற பதக்கங்களை பெற்ற மனோகரன் 7 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று சாதனையுடன் வீடு திரும்பியுள்ளார். இந்தநிலையில் டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தகுதி போட்டி பிரிட்டனில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மனோகரனுக்கு விமான டிக்கெட் உணவு தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்காக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதால் நன்கொடையாளர்களை எதிர்பார்த்துள்ளார்.