கண் பார்வையற்றவரையும், அவரது தாயாரையும் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கஞ்சூர் பகுதியில் 48 வயதான கண் பார்வையற்றவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமான கண்பார்வையற்றவரை அவரது தாயாருடன் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அந்த வாகனத்தின் ஓட்டுநர் உங்கள் பகுதிக்கு வாகனம் செல்லாது என்று கூறி கண் பார்வையற்றவரை அவரது தாயுடன் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளார்.
அப்போது முழு ஊரடங்கு நேரம் என்பதால் பேருந்துகள் இல்லாமல் தனது வீட்டிற்கு செல்வதற்கான வழியறியாது தாயும், மகனும் சாலையில் தனியாக நின்றுள்ளனர். இது குறித்து அறிந்த சிகரம் தொண்டு நிறுவனத்தினர் கண்பார்வையற்றவருக்கும், அவரது தாயாருக்கும் உணவு வழங்கியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டருக்கு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.