அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்னும் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தோற்றுவிக்கப்பட்டன. மேலும், முக்கிய முடிவுகளை எடுக்க வழிகாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டது.
அதிமுக விதிகளின்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆகியவை ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். ஆனால் 2018ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டப்படவில்லை. தேர்தல் ஆணையத்தில் பல்வேறு காரணங்களைக் கூறி பொதுக்குழு கூட்டுவதை தள்ளி வைத்துக்கொண்டே இருந்தனர். இறுதியாக ஜூன் மாதம் கூட்டப்படலாம் என்று பேச்சுகள் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் கடிதம் எழுதி தள்ளி வைத்தனர். இவ்வாறாக கடந்த இரண்டு வருடங்களாக தள்ளிப்போடப்பட்டுவந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு வருகின்ற 24ஆம் தேதி கூடும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், பொதுக்குழு கூட்ட அறிவிப்பு வந்துள்ளது. மேலும் சிறையில் உள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலையாக உள்ள நிலையில் அவர் மீண்டும் கட்சிக்குள் ரீ-என்ட்ரி கொடுப்பாரா என்பது பற்றியும் ஒரு கேள்வி எழுந்து வருகிறது. எனவே இந்த பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சசிகலா அதிமுக பிரவேசம் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.