தன்னைத் தானே கடவுளாக அறிவித்துக் கொண்டு பெங்களுரு, கேரளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா. இவரின் ஆசிரமத்தில் 4 இளம் பெண்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, சோதனை நடத்த ஆசிரமம் சென்றனர். அங்கு நித்யானந்தா இல்லை. அவர் வெளிநாடு தப்பிச்சென்று விட்டார் என்று தகவல்கள் வெளியானது.
ஆசிரமத்தில் நடந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. சாமியார் நித்யானந்தா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நித்யானந்தாவை கைது செய்ய காவலர்கள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். அவருக்கு எதிராக ப்ளு கார்னர் நோட்டீஸ் அனுப்பி சர்வதேச காவலர்களின் உதவியை நாட உள்ளனர். அதன் முயற்சியாக மாநில சிஐடி காவலர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர்.
ஒரு குற்றத்தில் ஈடுபட்டவர் வெளிநாடு தப்பிவிட்டால் அவர் இருக்கும் இடம் குறித்த தகவல்களை உறுப்பு நாடுகள் பகிர்ந்து கொள்வதற்கு “ப்ளூ கார்னர் அறிவிப்பு” தேவைப்படுகிறது. காவலர்கள் நித்யானந்தாவைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் ஈகுவடார் நாட்டின் அருகே சொந்தமாக தீவு வாங்கி கைலாசா என்ற தேசத்தை உருவாக்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.