திடீரென நடந்த தகராறு காரணமாக சுற்றுலா பயணிகளின் படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இந்நிலையில் படகு சவாரி செய்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் படகில் இருந்து இறங்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் 15 பேர் காயமடைந்த நிலையில், படகிலிருந்து சுற்றுலா பயணிகள் அவசரமாக படகை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர். அப்போது படகானது எதிர்பாராவிதமாக கவிழ்ந்து நீரில் மூழ்கிவிட்டது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி விட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிக்லி தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தண்ணீரில் மூழ்கிய 5 பேரின் உடல்களையும் கைப்பற்றிய வீரர்கள் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.