அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி ஊட்டி படகு இல்லத்தில் புதிய படகுகளின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் படகு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கான துடுப்பு படகு, மோட்டார் படகு, மற்றும் மிதி படகு போன்றவை இயக்கப்படுகின்றன. இங்கு இயற்கையை ரசித்தபடியே படகு சவாரி செய்வதற்கு பலரும் ஆவலோடு உள்ளனர். எனவே கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் படகுகளை சீரமைப்பது, அதற்கு வர்ணம் தீட்டுவது போன்ற பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. எனவே புதிதாக 26 படகுகள் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வரவழைக்கப்பட்டுள்ளது.
மேலும் மயில், வாத்து, டிராகன் போன்ற வடிவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட மிதி படகுகளும், கைப்பிடியுடன் கூடிய துடுப்பு படகுகளும் அங்கு வந்துள்ளன. ஆனால் புது படகுகளை இயக்க அனுமதி இல்லாததால் கடந்த சில நாட்களாக கரையோரத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து புதிய படகுகளின் தரத்தை ஆய்வு செய்து சோதனை ஓட்டம் நடத்துமாறு சென்னை சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவுறுத்தியதை தொடர்ந்து புதிய படகுகள் சோதனை ஓட்டத்திற்கு இயக்கப்பட்டன. இந்த புதிய படகுகளில் உயிர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்தவாறு சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர்.
இந்நிலையில் இரண்டு இருக்கைகள் மற்றும் நான்கு கைகளை கொண்ட இப்படகுகள் தண்ணீரில் சமநிலையில் செல்கிறதா அல்லது மிதக்கும்போது முன்னோ, பின்னோ நகர்கிறதா என்று ஆய்வு செய்தனர். அதோடு படகு சவாரி செய்யும் போது எளிதாக திரும்புகிறதா என்றும் கவனித்தனர். மேலும் சோதனை ஓட்டத்தின்போது டிராகன் மயில் போன்ற வடிவமுள்ள படங்களில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். எனவே புதிய படகுகளை இயக்க அனுமதி கிடைத்ததும் அனைத்து படகுகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.