கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலானது அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூர் கிராமத்தில் பிரசாந்த் என்கிற புருஷோத்தமன் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு பணிமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்தின் தந்தையான அம்சா வேல் கோவை வடக்கு காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என கடந்த 7ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் உதயகுமார் என்ற நபர் பிரசாந்த் இடம் கடனாக பணம் கேட்டதும் பிரசாந்த் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும் தெரியவந்துள்ளது. அப்போது உதயகுமார் புதியதாக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு பணம் உள்ளது ஆனால் எனக்கு கடன் கொடுக்க பணம் இல்லையா என்று கூறியபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த உதய் குமார் பிரசாந்தை காண்டூர் கால்வாயில் தள்ளிவிட்டு கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் உதயகுமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் காண்டூர் கால்வாயில் ஓடும் தண்ணீரை நிறுத்தி கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியோடு பிரஷாந்தின் உடலை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் குகைக்குள் இருக்கும் ஒரு மரக்கிளையில் பிரசாந்தின் உடல் அழுகிய நிலையில் சிக்கி இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்து அதனை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.