டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்
கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான் பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் ஒன்றிய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனைப்பற்றி சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா மற்றும் வட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியவர்கள் கூறியதாவது. ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நாரால் நீர் சேமிக்கும் கலன்களை நன்கு தேய்த்து கழுவி பின் தண்ணீர் பிடித்து மூடி வைக்க வேண்டும். இதை செய்வதினால் ஏடிஎஸ் கொசு முட்டைகள் அழிக்கப்பட்டுவிடும்.
மேலும் கொசு உற்பத்தியை தடுக்க வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவையற்றப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் உரல், ஆட்டுக்கல் போன்ற உபயோகப்படுத்தாத பொருட்களை மணல் நிரப்பி நீர் தேங்காத வகையில் வைக்க வேண்டும். மேலும் ஒரு நபருக்கு காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக செல்ல வேண்டும். இளநீர், உப்பு சர்க்கரை கரைசல், பழச்சாறு, போதுமான அளவு தண்ணீர் ஆகியவற்றை சாப்பிடவேண்டும். தண்ணீரை நன்கு கொதிக்கச் செய்து ஆற வைத்து குடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.