முன்னாள் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சிறந்து வேகப்பந்துவீச்சாளருமான ஜுலன் கோஸ்வாமி 2008-2011 காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் அணியை சிறந்த முறையில் வழிநடத்தியுள்ளார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்ததற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான அர்ஜுனா, பத்மஸ்ரீ விருது உள்பட பல விருதுகளையும் ஜுலன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா ஜுலன் கோஸ்வாமி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை ‘பாரி’ பட இயக்குநர் புரோசித் ராய் இயக்குகிறார். சோனி பிக்சர்ஸ் இந்தியா, டுநமிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ள நிலையில், தற்போது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடிகை அனுஷ்காவுக்கு ஜுலன் கோஸ்வாமி பயிற்சியளிக்கும் காணொலி இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவிவருகிறது.
இறுதியாக அனுஷ்கா ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜீரோ படம் 2018ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. கடந்தாண்டு எந்தப் படமும் வெளியாகவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. மேலும், அனுஷ்கா கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கவிருப்பதால் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது கோலியின் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டாப்ஸி நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.