ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘சப்பாக்’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், லட்சுமி அகர்வால் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தீபிகா ஆசிட் வீச்சில் பாதிப்படைந்ததுபோல் தனது முகத்தை சிறப்பு மேக்கப் மூலம் மாற்றம் செய்து நடித்துள்ளார். ‘சப்பாக்’ படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளில் தீபிகா கவனம் செலுத்திவருகிறார்.
இதனிடையே தனியார் செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்ட தீபிகா படுகோன், படம் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், ” ‘சப்பாக்’ திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எண்ணியே சப்பாக் படத்தில் நடித்தேன். இந்தக் கதை மக்களிடம் சென்றடைவது சமூகத்திற்கும் நாட்டிற்கும் நல்லது. போராட்டத்திலிருந்து மீண்டு வாழ்க்கையில் எப்படி முன்னேறிச் செல்கிறார்கள் என்பதை உணர்த்தவே இதனை ஏற்று நடித்தேன்” எனக் கூறினார்.