இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 250_க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
இந்த கொடூர தாக்குதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மீண்டும் தற்கொலை படை தாக்குதல் நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கர வாதிகள் திட்டமிட்டு இருந்ததை முறியடித்த இலங்கை பாதுகாப்பு படையினர் 3 தற்கொலை படை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து கொன்றனர். இருந்தாலும் இலங்கைக்கு இன்னும் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க உளவுத்துறை இலங்கையில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இருக்கும் தனது தூதரகம் மூலம் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா இலங்கைக்கு தெரிவித்துள்ளது. அதில், “தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இலங்கையில் இன்னமும் பிடிபடாமல் இருப்பதால் அவர்களிடம் பயங்கர வெடி பொருட்கள் இருக்கின்றது. எனவே மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.