கர்நாடகாவில் மங்களூர் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில், பை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக பையை சோதனை செய்த அலுவலர்கள், வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் குழுவினர், அந்த வெடிகுண்டை ஆய்வு செய்தனர்.
ஆனால், வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் துரிதமாக யோசித்த குழுவினர், வெடிகுண்டை திறந்த நிலப்பகுதிக்கு பிரத்தியேக வாகனத்தில் எடுத்துச் சென்றனர். அங்கு வெடிகுண்டை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கிவைத்து வெடிக்க செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், இந்நிகழ்வை தொடர்ந்து, பாஜ்பே (Bajpe) சர்வதேச விமான நிலையத்தின் முனைய மேலாளருக்கு மங்களூரிலிருந்து ஹைதராபாத்திற்குச் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து விமான அலுவலர்கள் கூறுகையில், “பாஜ்பே விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திலிருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்களை அப்புறப்படுத்திய பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்” என்றனர்.