பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் முக்கிய குற்றவாளியான உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி அச்சம் குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கணவன்-மனைவி, கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண் போன்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த ஆலையின் அனைத்து அறைகளும் இடிந்து தரைமட்டமாகியதால் படுகாயம் அடைந்த அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் அந்த ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைக் காரர்கள் பொண்ணு பாண்டி, ராஜா, சக்திவேல், சிவக்குமார், வேல்ராஜ் போன்ற 6 பேர் மீது வழக்குப் பதிந்து சக்திவேல் மற்றும் பொண்ணு பாண்டி ஆகியோரை கைது செய்தனர். சக்திவேலின் மனைவி ஜெயராமு என்பவரையும் போலீசார் கைது செய்து விட்டனர். அதன்பிறகு தலைமறைவான பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தன மாரியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பியோடிய மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.