கொலம்பியாவில் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் காவல்துறையினர் இருவர் பலியாகியுள்ளனர்.
கொலம்பியாவில் அதிகமாக போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. எனவே, போதைப் பொருள் விற்பனையை தடுப்பதற்காக அந்நாட்டின் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், அங்கு பல கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இயங்கி வருகிறது. பக்கத்து நாடான வெனிசுலாவின் ஆதரவோடு தேசிய விடுதலை ராணுவமும், கொலம்பியா புரட்சிகர இராணுவமும், அங்கு இயங்கி வருகிறது.
இந்த இரண்டு கிளர்ச்சியாளர்கள் அமைப்பையும் அந்நாட்டு அரசு தீவிரவாத இயக்கம் என்று அறிவித்திருக்கிறது. எனவே, போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பல், தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்குள்ள குகுடா நகரத்தில் இருக்கும் ஹமிலோ டாசா என்ற சர்வதேச விமான நிலைய ஓடுதளத்திற்குள் நேற்று இரவு நேரத்தில் ஒரு தீவிரவாதி தன் உடலில் வெடிகுண்டை பொருத்திக்கொண்டு நுழைந்திருக்கிறார்.
ஆனால் விமானம் நின்ற இடத்திற்கு அவர் வருவதற்குள் ஓடு தளத்திலேயே வெடிகுண்டு வெடித்ததில், அந்த தீவிரவாதி உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு பிறகு விமான நிலையத்தில் காவல்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் விமான நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்ட பெட்டியில் வெடிகுண்டு இருந்தது.
அதனை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று அந்த வெடிகுண்டு வெடித்ததில் காவல்துறையினர் இருவர் பரிதாபமாக பலியாகினர். அடுத்தடுத்து இரண்டு முறை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.