பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி அதை குத்தகைக்கு விட்டிருப்பது தான் வெடி விபத்திற்கு முக்கிய காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளம் என்ற பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மாவட்ட கலெக்டர் தலைமையில் பட்டாசு ஆலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காக பட்டாசு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் வருவாய் அலுவலர், பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை இயக்குனர் போன்றோர் உள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து கூட்டம் நடத்தி அதில் உள்ள குறைபாடுகளை நீக்குவதே இந்த குழுவின் பணி ஆகும். ஆனால் இந்தக் குழுவானது பட்டாசு ஆலைகளை சரிவர ஆய்வு நடத்த வில்லை என பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் பல தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட 336 பட்டாசு விபத்துகளில் 482 பேர் கடந்த 2000 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பலியாகியுள்ளனர். இதில் 2010 முதல் 2020 ஆண்டுகளில் நடந்த 161 வெடி விபத்துக்களில் 310 பேர் பலியாகிவிட்டனர். எனவே இந்த விபத்துக்களை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.