சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீசாருக்கும், சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.அதோடு சென்னை சென்ட்ரல்- திருப்பதி, சென்னை சென்ட்ரல்-நிஜாமுதீன்.மற்றும் சென்னை சென்ட்ரல்-கோவை போன்ற ரயில்களிலும் சோதனை நடத்தினர். இதேபோல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த இரண்டு இடங்களில் தீவிர சோதனை நடத்தியும் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் யார் என்று போலீசார் விசாரித்த போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் வடபழனி ஒட்டகப்பாளயத்தில் வசித்து வந்த முருகன் என்பதும், இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இவர் தனது மனைவியின் செல்போனை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.