கஞ்சா விற்பனை செய்த கும்பலை பிடிக்க முயன்றபோது காவல்துறையினரை நோக்கி குற்றவாளிகள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை மதுரவாயல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு தலைவனான ஆந்திராவைச் சேர்ந்த ஹரி என்ற முக்கிய நபரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கஞ்சா வியாபாரி ஹரி மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கியிருந்த வீட்டை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.
இதனை அறிந்த உடனே அந்த கும்பல் நாட்டு வெடிகுண்டை காவல்துறையினரை நோக்கி வீசியுள்ளனர். இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதால் 2 காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா வியாபாரியான ஹரி மற்றும் அவரது கூட்டாளிகளான மதன், முரளி போன்றோரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.